Saturday, April 11, 2009

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே! இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் - உனை எப்போதும் மறவாது தமிழினம்! தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது! தலைவன் நீ என்ன செய்தாய்! தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து, முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்! பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க! எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும் வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன் சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று! தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன் மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம் ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்! இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன் அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள் இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே! தமிழனை குறைவாக எடைபோட்டாய்! தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்! முடிந்தது உன் ஆட்சி! மடிந்தது உன் சூழ்ச்சி! அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்! அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை அப்படியே பொசுக்கட்டும்! ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்! அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்! அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்! அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்! சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்

Wednesday, April 1, 2009

கடந்த 4.03.2009 இதழில் வெளியான ‘யுத்தம் யாரை விட்டது?’ என்ற தலைப்பிலான த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்றிய எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.
இதைப் பிரசுரித்தாலும் விட்டாலும் எனது பெயர், முகவரியை மட்டும் எக்காரணம்கொண்டும் வெளியில் விடாதீர்கள்.
இது யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வாழும் பெற்றோரையும், என் அண்ணனின் குடும்பத்தையும் அவலத்துக்கு உள்ளாக்கும் என்று அஞ்சுகிறேன்.அகிலனுக்குப் புலம்பெயர் மண்ணிலிருந்து ஒரு கடிதம்…
இழப்புகள் தந்த வலியினால் வார்த்தைகள் வறண்டுபோய் மூடி வைத்துவிட்ட பேனாவை மறுபடியும் எடுக்கின்றேன், ‘உனது ‘மரணத்தின் வாசனை’ நூலைப் பற்றி விகடனில் வெளிவந்த கட்டுரைக்காக.
என்னை மன்னித்துக்கொள்… உனது நூலை முழுமையாகப் படிக்கக் கிடைக்காமலே, இதை எழுத நேர்ந்ததற்கு.
எனினும், அதன் உணர்வுபூர்வமான வலிகளை விகடன் எடுத்துக் காட்டியிருந்தது.
ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக் குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக்கொள்ள முடியாது. இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம்.
உனது வேதனை வரிகளை விமர்சிக்க முடியாது. ஆனாலும்கூட ஒருசில நெருடல்கள் என் மனதைத் துண்டுகளாக உடைத்துத் தூங்கவிடாமல் பண்ணியது.
ஐந்து வேளையும் இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்ப் பட்டியல் பார்ப்பது நீ மட்டுமல்ல… வன்னி மண்ணில் இருக்கும் தங்கள் பெற்றோரை, சகோதர-சகோதரிகளை, உறவுகளை எண்ணி உணவு இறங்காமல் நடைப் பிணமானவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.
உன் அம்மம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு உன் பதின் பருவத்துக் கடைசி வயதுகளில், ‘பொடியள் மறுபடி பிடித்த ஆனையிறவில்’ உன் வீடு பார்க்க நீ போன தருணத்தில், ராணுவக் காலனிகள் சூழ்ந்த யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் நான் விம்மலையும் வேதனைகளையும் தொண்டைக்குழிக்குள் தேக்கிவைத்துக்கொண்டு சுருண்டு படுத்திருந்தேன்.
தன் பதின் கடைசி வயதுகளில் போராளியாகிய என் தம்பி, அதே ஆனையிறவுச் சமரில் படுகாயமடைந்து மரணப் படுக்கையில் கிடப்பதாக, என் அம்மா முல்லைத் தீவிலிருந்து செய்தி அனுப்பியிருந்தார்.
அதே ஆனையிறவுத் தளத்தின் வெற்றி விழாவில் மக்கள் கலந்து மகிழும்போது, நீ சொன்ன கிரிக்கெட் ஸ்கோரின்படி 400 வீடுகளில் பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள் (என் தம்பி பிழைத்துக்கொண்டான்).
எங்கள் மக்களின் துயரங்களை வெளியில் கொண்டுவரும் உன் படைப்பு உன்னதமானதுதான்.
அப்பாவிப் பொதுமக்களை யும், பச்சிளம் பாலகர்களையும் படுகொலை செய்யும் போர் எனும் அரக்கனின் பிடியில், எங்கள் மக்கள் மரணத்தின் முன் மண்டியிட்டுக்கிடக்கிறார்கள் என்பதை வெளி உலகம் கண்டும் காணாமல் இருக்கும்.
உண்மைதான் சகோதரா, ஆனாலும்கூட வெளி உலகம், பொதுமக்கள் - போராளிகள் என்று பிரித்துப் பார்ப்பதைப் போலவா நீயும் பார்க்கிறாய்?
உன்னை நேசித்த காயத்திரி தன் மண்ணை நேசித்து நஞ்சு மாலை சூடிக்கொண்டதுகூட அவளின் வீரச் சாவின் பின்னர்தான் உனக்குத் தெரிய வந்ததா சகோதரனே? ‘துவக்குப் பிடித்தவன் மரணத்தை நிச்சயித்துக்கொண்டவன்.யுத்த முனையில் களமாடு பவனின் உயிர் என்பதும் துப்பாக்கிக் குண்டு போல ஓர் ஆயுதமே’ என்று இரட்டை வரிகளில் அந்நியப்படுத்திவிட்டாயே? அவர்கள் என்ன பிறக்கும்போதே தாய், தந்தை, குடும்பம் ஏதும் இல்லாமல் கழுத்தில் குப்பியும் கையில் குண்டுமாகப் பிறந் தார்களா?
மருத்துவப் பீடத்துக்குத் தெரிவாக வேண்டும் என்ற கனவுடன் படித்தவன் என் கடைசித் தம்பி.
தனது எதிர்காலப் படிப்புக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவே பள்ளியில் செயின்ட்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் முதலுதவிப் படையில் சேர்ந்துகொண்டவன்.
அதே முதலுதவிப் படை, அவனை மானிப்பாயில் ராணுவம் நிகழ்த்திய ‘முன்னேறிப் பாய்ச்சல்’ நடவடிக்கையில் காயம் அடைந்த பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தியது.
வீட்டிற்குத் திரும்ப வந்தவன், ‘எத்தனை குழந்தைகளைத் தூக்கினேன் தெரியுமா? எத்தனை பிணங்களைத் தூக்கினேன் தெரியுமா?
கையைக் கழுவக் கழுவ ரத்தம் ஒட்டியிருக்கிறது’ என்று அரற்றிக் கொண்டு இருந்தான். அடுத்த மாதமே வீட்டைவிட்டுப் போய்விட்டான். நீ சொன்னபடி துவக்கு தூக்கிக்கொண்டு மரணத்தை நிச்சயித்துக்கொண்டான்.
தனது பிள்ளைகளின் கல்வி, எதிர் காலம் என்று கனவு கண்ட என் பெற்றோர், கடைசிப் பிள்ளை கனவைக் கலைத்தாலும், மற்றைய மூவரும் ஈடு செய்வார்கள் என்றிருந்தார்கள்.
அவர்களது கனவைத் திரும்பச் சிதறடித்துவிட்டு, 95-ல் யாழ் மண்ணில் இருந்து இடம்பெயர்ந்தபோது, எனது அடுத்த தம்பியும் தன் தம்பியின் தடம் ஒற்றிப் போய்விட்டான்.
இவர்கள் மரணத்தை நிச்சயித்துக்கொண்டார்கள் என்று நாங்கள் தண்ணீர் தெளித்துவிடவில்லை சகோதரா! அவர்கள் கள முனையில் நிற்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் செத்துப் பிழைக்கும் வாழ்வை வாழ்பவர்கள்.
பாம்பு கடித்து இறந்தாலும், பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு இறந்தாலும், களத்தில் வீர மரணம் என்றாலும், இழப்பு தரும் வலி, இருப்பவர்களுக்கு ஒரே மாதிரியானதுதான். வலி தரும் உணர்வுகள் மட்டுமே வெவ்வேறானவை.
என் கடைசித் தம்பியின் வீர மரணச் செய்தி கேட்டுக் கதறித் துடித்தபோது, கட்டிப் பிடித்து அழுவதற்கு அவன் உடல் கூடக் கிடைக்கவில்லை. சட்டம் இடப்பட்ட புகைப்படமே மிச்சம் இருந்தது எங்களுக்கு.
இவர்கள் வலுக்கட்டாயமாகப் போரில் நுழையும் சண்டியர்கள் அல்ல; காலம்காலமாகப் போர் எங்களில் திணிக்கப்பட்டது.
இயக்கத்துக்காரியான உனது மச்சாளின் பேச்சு குறைந்திருந்தது என்று எழுதி இருந்தாய்.
தயவுசெய்து இப்படி எழுதுவதன் மூலம் அவர்களை இரும்பு மனிதர்கள் என்று உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிவிடாதே! அவர்கள் அன்பானவர்கள்; கலகலப்பானவர்கள்.
அடுத்தவன் அழிவைப் பார்த்தே, ‘ஐயையோ’ என்று பதறி ஆயுதம் எடுத்தவர்கள். யார் அழிந்தாலும் எனது வாழ்வு, எனது படிப்பு, எனது உயிர் முக்கியம் என்று கடக்க முடியாதவர்கள்.
இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதாக எழுதி இருந்தாய். கனடாவில் இருந்து நானும் அதையே செய்கிறேன், சகோதரா! சிறிய வித்தியாசம்.
நெஞ்சுக்குழிக்குள் ரயில்கள் தடதடக்க, மாவீரர் பட்டியலில் அடுத்த தம்பியின் பெயர் உள்ளதா என்று பார்க்கும் கணப் பொழுதுகளும் மிகக் கொடுமையானவை.அதில் அவன் பெயர் வரவில்லை என்று உணர்ந்து வரும் அந்தச் சிறு நிம்மதியை, அதில் உள்ள மற்றைய பெயர்கள் எல்லாமே என் சகோதரச் சகோதரிகளாக மாறி அடித்துச் செல்ல, எஞ்சி நிற்கும் வெறுமை ஆளையே கொல்லும்.
பொதுமக்கள் இறந்தாலோ, காயப்பட்டாலோ, பெயர் விவரம் எங்களை உடனே வந்து சேரும்.
போராளிகள் இறந்தால்கூட, தாமதமாக என்றாலும் பட்டியல் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், காயம் அடைந்து விழுந்துகிடக்கும் போராளிகளின் பெயர் எந்தப் பட்டியலிலும் வராது சகோதரா!
எங்கள் போராளிகள் வெற்றி பெறும்போதெல்லாம் முழு நீள ஆக்ஷன் திரைப்படம் பார்ப்பது போல், நீ சொன்னது போல்… கனவுகளைத் தின்னும் கற்பனைக் குதிரைகளில் தொலைவுகளைக் கடந்துவிட்டு, இப்போது கிளைமாக்ஸ் பிடித்தபடி அமையாத போது…
இது சரிப்பட்டு வராது, என் உறவுகள் என்னுடன் இருந்தால் போதும் என்று வாழ்பவர்கள் - புலம் பெயர் மண்ணி லும் வாழ்கிறார்கள்; வன்னி மண்ணிலும் வாழ்கிறார்கள்.
அது போலவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கட்டாயத்தினால், போராட்டத்தில் இருந்தும் நாட்டில் இருந்தும் வெளியேறிவிட்டு, ‘ஐயோ! இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளதே, கடல் கடந்து, கண்டம் கடந்து ஈழம் போய்ச் சேர மாட்டோமா?’ என்று மனம் குமுறுபவர்கள் புலம் பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கில்.
அதன் வடிவமாகத்தான் லட்சங்களைக் கொட்டி வெளிநாடு வந்த முருகதாசன், ஐ.நா. வாசலில் தீயூட்டிச் செத்துப் போனான்.
எங்களை விட்டுவிடு. புலம் பெயர்ந்து வந்தாலும் எங்கள் வாழ்வுகள் ஈழத்தில் புதையுண்டு கிடக்கின்றன.
ஈழத்தில் எம் மக்கள், கொத்துக் கொத்தாகச் செத்து மடிவதைக் கண்டு மனம் வெதும்பித் தன்னைத் தீயிட்டு, இந்த அவலத்தை உலகறிய வைத்தானே முத்துக்குமார், அவன் எந்த கிளைமாக்ஸை எதிர்ப்பார்த்திருந்தான்? அவனைத் தொடர்ந்து எத்தனை பேர்?
இவர்களின் குடும்பங்களையும் எமது நாட்டின் போர் முத்தமிட்டுச் சென்றுள்ளதே! இவர்களின் இழப்புக்கு எதனை ஈடுவைக்கப் போகிறோம் நாம்?
தான் இறந்தாலும் பரவாயில்லை, என் மக்கள் வாழ வேண்டும் என்று கரும்புலியாய் செல்லும் எங்கள் வீரனின் தியாகத்துக்கும், தான் இறந்தாலும் பரவாயில்லை, ஈழத் தமிழன் வாழ வேண்டும் என்று தன்னை அழித்த முத்துக்குமாரின் தியாகத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை எனக்கு.
”எங்கள் இனிய உறவுகளே, எங்கள் மக்கள் அழிந்துகொண்டு இருப்பதைப் பார்த்து அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
ஆனாலும், மேலும் மேலும் முத்துக்குமாரைப் பின்பற்றுபவர்களைப் பார்த்துக் கை தொழுது கேட்கின்றோம். சாவில் எழுதிய ஜாதகங்கள் எங்களுடையதாக இருக்கட்டும்.
மரணத்தின் வாசனை உங்கள் வாசலுக்கும் வருவதைப் பார்த்திருக்க எங்களால் முடியவில்லை. எங்கள் வரலாறு ரத்தத்தால் வரையப்படுகிறது. அதற்குத் தீச் சுவாலைகளால் சட்டம் இடாதீர்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது.
”உதிரியாகத் தீக்குளித்துச் சாவதை விடுத்து ஒன்றுபடுங்கள் மக்களே! ஈழத் தமிழனைக் காக்க என்று தினம்தோறும் புதிது புதிதாக அமைப்புகள் தொடங்குகிறார்கள் அரசியல்வாதிகள்.
எதற்கு இத்தனை அமைப்புகள்? மக்களே, உங்கள் போராட்டம் தவறான பாதையில் போக விடாதீர்கள்.
உங்களுக்குப் பின்னால் அத்தனை கட்சிகளையும் அணி திரட்டுங்கள் என்று வேண்டுகிறேன் நான் - தமிழகத்து உறவுகளை!’
‘புலம் பெயர் நாடுகளில், பயங்கரவாதம் என்று தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றிக் கதைக்காமல், உங்கள் கவன ஈர்ப்பை நடத்துங்கள்’ என்றார்கள்.
நாங்களும் செவி சாய்த்தோம். எங்கள் போராட்ட உணர்வை, தமிழீழ உணர்வை ஒதுக்கிவைத்து, மக்கள் அழிவதை மட்டும் எடுத்துக் காட்டினோம்.
அவர்களோ, மக்களை வெளியேற்றி ராணுவத்திடம் கொடுத்துவிட்டு, இனி புலிகளை அழியுங்கள் என்று சொல்ல ஆசைப்பட்டார்கள். நாங்கள் விழித்துக்கொண்டோம். இப்போது ‘புலிகள்தான் மக்கள்.
மக்கள்தான் புலிகள்’ என்ற போராட்டத்தை அங்கீகரி’ என்றே போராடுகிறோம். உன் எழுத்துக்களும் இதையே செய்யட்டும், சகோதரா! அவர்களின்றி நாங்கள் இல்லை. நாங்கள் இன்றி அவர்கள் இல்லை. இதை உலகுக்கு உணர்த்து!